எங்களை சந்திக்க வரும் ‘காங்கிரஸ் தலைவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்’ கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம்

காங்கிரஸ் தலைவர்கள் எங்களை சந்திக்க வந்தால், அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
மும்பை,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் 10-க்கும் மேற்பட்டோர் மும்பை ஓட்டலில் தங்கி உள்ளனர். அவர்களது ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதனால் அவரது அரசு தப்புமா? அல்லது கவிழுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக மும்பையில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசி சமரசப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மல்லிகார்ஜூன கார்கே உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வர இருப்பதாக தகவல்கள் வெளியானது.
போலீஸ் கமிஷனருக்கு கடிதம்
இந்த பரபரப்பான சூழலில் ஓட்டலில் தங்கியிருக்கும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வேக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில், “மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் அல்லது அவர்கள் போன்ற எந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க வேண்டிய தேவை இல்லை. அவர்களால் நாங்கள் மிரட்டப்படலாம். எனவே எங்களை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த 10-ந் தேதி கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச வந்திருந்தார். அந்த தருணத்தில் இதேபோல எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து டி.கே. சிவக்குமாரை ஓட்டலுக்குள் விட மறுத்த போலீசார், பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரை பெங்களூருக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story