பொங்கலூரில் கோழிப்பண்ணை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை திருட்டு


பொங்கலூரில் கோழிப்பண்ணை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 July 2019 9:45 PM GMT (Updated: 16 July 2019 8:26 PM GMT)

பொங்கலூரில் கோழிப்பண்ணை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர், முருகன் நகரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 57). இவர் பொங்கலூரில் உள்ள தனியார் கோழிப்பண்ணை அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி (47). இவர்களது மகன் விக்னேஷ் (29). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிருந்தா(29). இவர் கோவையில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வீரமுத்து மற்றும் கலாமணி ஆகியோர் பொள்ளாச்சி அருகே நல்லக்கட்டிபாளையத்தில் உள்ள தங்கள் விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அன்று இரவு வீரமுத்து மட்டும் பொங்கலூர் வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீரமுத்து கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்று விட்டார். விக்னேஷ் மற்றும் பிருந்தா ஆகியோரும் வேலைக்கு சென்று விட்டனர்.

அன்று இரவு பணி முடிந்து 8 மணியளவில் வீரமுத்து வீட்டிற்கு வந்துள்ளார். மெயின்கேட்டை திறந்து உள்ளே சென்றபோது வீடு திறந்து கிடந்துள்ளது. கதவின் அருகே சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வீரமுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) தனராசு மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர் வேலைக்கு சென்றிருந்த விக்னேஷ் மற்றும் பிருந்தா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் வைத்திருந்த நகைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கூறியதன் அடிப்படையில் பிருந்தாவின் 10 பவுன் நெக்லஸ், 5 பவுன் ஆரம், 6 பவுன் வளையல் மற்றும் மோதிரம், தோடு உள்பட மொத்தம் 33 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. மேலும் 2 வெள்ளி குத்துவிளக்குகள், காமாட்சி விளக்கு ஒன்று, ஒரு ஜோடி கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியனவும் திருட்டு போனது தெரியவந்தது. இவைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

Next Story