உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததாக 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா (வயது 23). இவர்களது மகன் ஹரிஷ் (5) அங்குள்ள தனியார் பள்ளியில் 1-ம்வகுப்பு படித்து வந்தான். இவனை கடந்த 14-ந்தேதி காலையில் இருந்து காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள சுடுகாட்டில் முகத்தில் காயத்துடன் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கோம்பை போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
ஹரிசின் தந்தை முருகனுக்கும், தாய் கீதாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 2 வருடத்துக்கு முன்பு அவர்கள் பிரிந்துவிட்டனர். பின்னர் முருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கீதா அதே பகுதியில் வசித்து வரும் உதயகுமார்(35) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ஹரிஷை தனது பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார். பின்னர் கீதா, உதயகுமாருடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு பக்கத்திலேயே குடியேறினார். இதனால் ஹரிஷ் அடிக்கடி தாய் கீதாவிடம் வர ஆரம்பித்தான். மேலும் இரவு நேரத்திலும் தாயுடன் வந்து படுத்து தூங்கினான். அந்த வீட்டில் ஒரு அறை மட்டுமே இருந்தது. இதனால் கீதாவும், உதயகுமாரும் உல்லாசமாக இருப்பதற்கு அவன் இடையூறாக இருக்கிறான் என கருதி எரிச்சல் அடைந்தனர்.
கீதாவின் தங்கை புவனேஸ்வரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல புவனேஸ்வரியும், உதயகுமாரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதை ஹரிஷ் பார்த்து விட்டான். எனவே அனைவரின் உல்லாசத்துக்கும் ஹரிஷ் இடைஞ்சலாக இருப்பதாக அவர்கள் கருதினர். இதையடுத்து அவனை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி கீதாவும், உதயகுமாரும் தனது வீட்டுக்கு புவனேஸ்வரி, கார்த்திக் ஆகிய இருவரையும் வரவழைத்தனர். அங்கு 4 பேரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினர். அப்போது ஹரிஷ் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று உதயகுமாரும் கீதாவும் தெரிவித்தனர்.
பின்னர் அன்று இரவு 8 மணிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து ஹரிஷை கோம்பை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றவுடன் சிறுவனை இரக்கம் இன்றி 4 பேரும் செங்கல் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் புவனேஸ்வரியும், கார்த்திக்கும் ஆட்டோவில் கம்பத்திற்கு சென்றுவிட்டனர். உதயகுமாரும், கீதாவும் ஒன்றும் தெரியாததுபோல் அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இவ்வாறு தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுவனை, உதயகுமார், கீதா, கார்த்திக், புவனேஸ்வரி ஆகிய 4 பேரும் ஆட்டோவில் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது 4 பேரும் சேர்ந்து சிறுவனை கொலை செய்ததை ஒப்பு கொண்டனர். இதைதொடர்ந்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதா, உதயகுமார், கார்த்திக், புவனேஸ்வரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story