போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 5 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிய 5 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகன ஊர்வலம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தொடங்கியது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் முன்னிலை வகித்தார். அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து விழிப்புணர்வு வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இருசக்கர வாகனங்களை ஓட்டும் அனைவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு ‘ஹெல்மெட்’ அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களை இருசக்கர வாகனங்கள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்து போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். உடனடியாக அவர்களின் பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தோம்.
மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததாக 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், செல்போன் பேசியபடியே வாகனங்களை ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லுதல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்காக 5 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமங்களை போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நகர் பகுதியில் 7 இடங்களில் செயல்படாமல் உள்ள சிக்னல்களை தனியார் பங்களிப்புடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவை சரிசெய்யப்படும். அதேபோல் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் தற்போது 30 சதவீதம் பேர் ‘ஹெல்மெட்’ அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர். இதனை 80 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒரு முயற்சியே விழிப்புணர்வு வாகன ஊர்வலம் ஆகும். இந்த வாகனத்தில் 5 அடி உயர ‘ஹெல்மெட்’ மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் அனைவருக்கும் ‘ஹெல்மெட்’ அணிந்து தான் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த விழிப்புணர்வு வாகனங்கள் இன்று (அதாவது நேற்று) திண்டுக்கல் நகர்ப்பகுதிகளில் வலம் வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. நாளை முதல் தொடர்ந்து 6 நாட்கள் பழனி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, கொடைக்கானல் என மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story