சித்ரதுர்கா அருகே, கார்-லாரி மோதல்: பெண்கள் உள்பட பெங்களூருவை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி சாவு கோவிலுக்கு சென்ற போது சோகம்

சித்ரதுர்கா அருகே, கார்-லாரி மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட பெங்களூருவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கோவிலுக்கு சென்ற போது இந்த சோகம் நடந்து உள்ளது.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா தாலுகா கஞ்சினால் கிராமத்தின் வழியாக பெங்களூரு-பாதாமி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நேற்று அதிகாலை 4 மணியளவில் கஞ்சினால் கிராமத்தின் அருகே கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென கார் டயர் வெடித்தது. இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. மேலும் எதிரே வந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்து பற்றி அறிந்த சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி பெண்கள் உள்பட 4 பேர் இறந்தது தெரியவந்தது. மேலும் குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். அவர்களை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூருவை சேர்ந்தவர்கள்
இதற்கிடையே விபத்தில் இறந்த பெண்கள் உள்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த அசோக்(வயது 40), சைலஜா(42), மேலும் 2 பெண்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் பெயர், விவரம் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதும் தெரியவந்தது. பின்னர் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story