தாராபுரம் அமராவதி ஆற்றில் அய்யப்பன் சிலை கண்டெடுப்பு ஐம்பொன்னால் செய்யப்பட்டதா? ஆய்வு செய்ய முடிவு


தாராபுரம் அமராவதி ஆற்றில் அய்யப்பன் சிலை கண்டெடுப்பு ஐம்பொன்னால் செய்யப்பட்டதா? ஆய்வு செய்ய முடிவு
x
தினத்தந்தி 19 July 2019 3:15 AM IST (Updated: 19 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அமராவதி ஆற்றில் அய்யப்பன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலை ஐம்பொன்னால் ஆனதா? என்று ஆய்வு செய்யப்பட உள்ளது.

தாராபுரம், 

தாராபுரம் கொளிஞ்சிவாடியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர் நேற்று காலை தனது நண்பர்களுடன், அருகே உள்ள அமராவதி ஆற்றில், பழைய பாலத்தின் அருகே குளிக்கச் சென்றுள்ளார். ஆற்று மணலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வினோத்குமாரின் காலில் ஏதோ கனமான பொருள் தடுக்கியுள்ளது. உடனே வினோத்குமார் தனது காலில் தட்டுப்பட்ட இடத்தில் ஆற்றுமணலை தோண்டினார். அப்போது சிலை ஒன்று தென்பட்டதைபார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அந்த சிலையை எடுத்துச் சென்று தண்ணீரில் கழுவி பார்த்தபோது அது அய்யப்பன் சிலை என்பது தெரியவந்தது.

சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி விரைந்து சென்று, வினோத்குமாரிடம் இருந்து அய்யப்பன் சிலையை பெற்றுக்கொண்டு அந்த சிலையை தாசில்தார் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.

அதன் பிறகு சிலை அங்கிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து, தாசில்தார் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

அமராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அரை அடி உயரம் கொண்ட அய்யப்பன் சிலை 5 முதல் 7 கிலோ எடை இருக்கலாம். இந்த சிலை எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை. இந்த சிலை ஐம்பொன் சிலையாக இருக்குமோ? என்கிற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் வல்லுனர்களைக் கொண்டு, அந்த சிலையை முறையாக ஆய்வு செய்து, அந்த சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலையா? இல்லையா? என்பது குறித்து கண்டறியப்படும். தற்போது பாதுகாப்பு கருதி அய்யப்பன் சிலையை இங்குள்ள கருவூலத்தில் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

Next Story