சுருக்குமடி வலையால் பிடித்த மீன்களை விற்க எதிர்ப்பு, பரங்கிப்பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்


சுருக்குமடி வலையால் பிடித்த மீன்களை விற்க எதிர்ப்பு, பரங்கிப்பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலையால் பிடிந்த மீன்களை விற்க எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை மீனவர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை,

தமிழக கடல் பகுதிகளில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை சில மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சுருக்குமடி வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்திற்கு மீனவர்கள் கொண்டு வந்து விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனால் பரங்கிப்பேட்டை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடித்து கொண்டு வருவதை தடுக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் அன்னங்கோவிலில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு படகு உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தின்னூர், இந்திராநகர், புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விசைபடகு உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் அந்த மீன்களை அந்தந்த பகுதியில் வைத்துதான் விற்பனை செய்ய வேண்டும். வெளியூரில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் சிதம்பரம் தாலுகா அளவில் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி மவுன போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில மீனவர்கள், வெளியூரில் சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை அன்னங்கோவிலுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நாங்கள் டீசலை உடலில் ஊற்றி தீக்குளிப்போம் என கூறி டீசல் கேன்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா ஆகியோர் விரைந்து வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதை ஏற்று மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இருப்பினும் மீனவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுக்கு யாரும் மீன்பிடிக்க செல்லாததால், அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. 

Next Story