நாட்டுப்புற கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்


நாட்டுப்புற கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 19 July 2019 10:30 PM GMT (Updated: 19 July 2019 7:09 PM GMT)

நாட்டுப்புற கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரூர், 

இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குரலிசை பரதநாட்டியம,் ஓவியம், சிற்பம், நாடக கலைஞர்கள் நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள்.

கரகம், காவடி, பொய்க்கால்குதிரை, மரக்கால் ஆட்டம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம் முதலிய கலைகள் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களில் 18 வயது அதற்குட்பட்டோருக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலை சுடர்மணி, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு கலை முதுமணி என வயதுக்கு தக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருது பெற விரும்புகிறவர்கள் தங்களது சுய விவர குறிப்புடன் நிழற்படம் இணைத்து தக்க சான்றுகளுடன் உரிய விண்ணப்பங்களை திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள கலைபண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தின் 0431-2434122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story