கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 July 2019 10:30 PM GMT (Updated: 20 July 2019 5:26 PM GMT)

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்தது. பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவை கண்காணித்து வருகிறார்கள்.

பென்னாகரம், 

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடந்தபோது காவிரி ஆற்றில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதித்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல் கேரள மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 5,199 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 17-ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நீர் வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 700 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

கர்நாடக மாநில அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழக பகுதிக்கு வந்து கொண்டிருப்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தின் அளவை கண்காணித்து வருகிறார்கள். நேற்று மத்திய நீர்வளத்துறையினர் பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை அளவீடு செய்தனர்.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்ததால் மெயின்அருவி, சினிபால்ஸ் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மீன்விற்பனை மற்றும் பரிசல் சவாரி விறுவிறுப்படைந்தது.

Next Story