கும்மிடிப்பூண்டியில் இ–சேவை மையம் முடங்கியதால் பொதுமக்கள் அவதி; ஆதார் உள்ளிட்ட சேவை பணிகள் பாதிப்பு

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக இ–சேவை மையத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக ஆதார் சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் பெத்திக்குப்பம் ஊராட்சியில் அமைந்து உள்ள தாசில்தார் அலுவலகத்தின் வாசலில் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக இ–சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள 61 ஊராட்சிகளை உள்ளடக்கிய 100–க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் என அனைவருக்கும் அரசு சான்றிதழ்கள் மற்றும் ஆதார் தொடர்பான தகவல்களை பெற மேற்கண்ட இ–சேவை மையம் பயன் உள்ளதாக அமைந்து உள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட இ–சேவை மையத்தில் ஆதார் தொடர்பான செயல்பாடுகள் மட்டும் கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப காரணங்களால் முடங்கி உள்ளது. இதனால் புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதாரில் திருத்தம் போன்ற ஆதார் தொடர்பான எந்தவித பணிகளும் இங்கு நடைபெறவில்லை.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து மிகுந்த சிரமத்திற்கு இடையே வெகு தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும் நேரில் வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
எனவே இ–சேவை பாதிக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.