நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 July 2019 4:00 AM IST (Updated: 25 July 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாகூர்,

நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நாகூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவே காணப்படுகிறது.

நாகூர்-நாகை மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வெளியூர்களில் இருந்து பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் நாகூரில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இறங்கி தர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல் நாகூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் புதிய பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவது வழக்கம். மேலும் எம்.ஜி.ஆர். நகர், பெரியார் தெரு, மாப்பிள்ளை தெரு, வண்ணான் குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

நடவடிக்கை

இந்தநிலையில் பஸ் நிலையம் அருகே உள்ள மெயின் சாலையில் குப்பைகள் கொட்டுவதற்காக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆதலால் இந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story