இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று போலீஸ் துணை கமிஷனர் வழங்கினார்


இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று போலீஸ் துணை கமிஷனர் வழங்கினார்
x
தினத்தந்தி 24 July 2019 11:00 PM GMT (Updated: 24 July 2019 8:49 PM GMT)

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா மரக்கன்று வழங்கி பாராட்டினார்.

மலைக்கோட்டை,

சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது விபத்துகளை தடுக்கும் விதமாக வருடந்தோறும் ஜூலை மாதம் சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதேபோல திருச்சி மாநகர போலீஸ் சார்பில் மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பிரிவு போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி நேற்று காலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா தலைமை தாங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மரக்கன்று

இந்த பேரணி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியிலிருந்து கே.டி.ஜங்ஷன், மெயின்கார்டு கேட், காந்தி மார்க்கெட், பாலக்கரை, தலைமை தபால் நிலையம், திருச்சி ரெயில்வே ஜங்ஷன் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை சென்று அங்கு முடிவு பெற்றது. முன்னதாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து முறையாக வாகனங்களை ஓட்டி வந்தவர்களை நிறுத்திய போலீஸ் துணை கமிஷனர் நிஷா அவர்களை பாராட்டி அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) பிரபாகர், ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், வடக்கு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி கமிஷனர் விக்னேஸ் வரன், தெற்கு உதவி கமிஷனர் அருணாச்சலம், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு, ராக்போர்ட் ஹோண்டா மேலாளர் விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் நேற்று முன்தினம் திருச்சி பாலக்கரை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சார்பில் காந்தி மார்கெட் மணிகூண்டு பஸ் நிறுத்தம், கண்டென்மெண்ட், சத்திரம் பஸ்நிலையம், பாலக்கரை, ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Next Story