ஆட்சி அமைப்பது குறித்து கட்சி மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறோம் - எடியூரப்பா பேட்டி

ஆட்சி அமைப்பது குறித்து கட்சி மேலிட உத்தரவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் எடியூரப்பாவை பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். புதிய ஆட்சி அமைப்பது குறித்தும், மந்திரிகளை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் ஆட்சி அமைப்பது குறித்து பா.ஜனதா மேலிடம் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. உடனே முதல்-மந்திரி பதவியில் அமரலாம் என்று திட்டமிட்டிருந்த எடியூரப்பா, ஏமாற்றம் அடைந்துள்ளார். இதற்கிடையே கட்சி நிர்வாகிகள் பலர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு எடியூரப்பா சென்று தலைவர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, “ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தினேன். அவர்களிடம் இருந்து சில ஆலோசனைகளை பெற்றுள்ளேன். ஆட்சி அமைப்பது குறித்து எங்கள் கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி, எந்த நேரத்திலும் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்“ என்றார்.
பெங்களூருவில் நேற்று சபாநாயகரை சந்தித்து பேசிய பிறகு பா.ஜனதாவை சேர்ந்த மாதுசாமி எம்.எல்.ஏ., “மேலிட பார்வையாளர் முன்னிலையில் சட்டசபை பா.ஜனதா கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் உத்தரவிட வேண்டும். எங்களது தேசிய கட்சி என்பதால், அனைத்து முடிவுகளும் ஜனநாயக முறைப்படி எடுக்கப்படும். அதனால் நாங்கள் கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அதன் பிறகு கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்போம்“ என்றார்.
Related Tags :
Next Story