சுயேச்சை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி நடவடிக்கை


சுயேச்சை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 26 July 2019 4:43 AM IST (Updated: 26 July 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

சுயேச்சையாக இருந்து காங்கிரசில் சேர்ந்தவர் உள்பட 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதோடு அவர்கள் 2023-ம் ஆண்டு வரை சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தடை விதித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, சிவராம் ஹெப்பார், பி.சி.பட்டீல், பிரதாப்கவுடா பட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், ரோஷன் பெய்க் ஆகிய 12 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், நாராயணகவுடா, கோபாலய்யா ஆகிய 3 பேரும் என மொத்தம் 15 பேர் கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தனர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசை சேர்ந்த ஸ்ரீமந்த்பட்டீல், நாகேந்திரா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கர் ஆகியோரும் கொறடா உத்தரவை புறக்கணித்தனர். இதையடுத்து அந்த எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் இரு கட்சிகளும் தனித்தனியாக கடிதம் வழங்கின.

இந்த நிலையில் சுயேச்சையாக இருந்து காங்கிரசில் இணைந்த சங்கர் மற்றும் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி ஆகிய 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று இரவு 7.45 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சிகள் என்னிடம் கடிதம் கொடுத்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வழங்கிய தகுதி நீக்கம் செய்ய கோரி மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டேன். என்னை சந்திக்க வருவதாக எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு சென்றனர். அதை நான் பரிசீலித்தபோது, அது சட்டப்படி இல்லை என்று தெரியவந்தது.

ஆனால் என் மீது குறை சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி என்னை சந்தித்து மனு கொடுத்தனர். அதுவும் மும்பையில் இருந்து தனி விமானத்தில் கும்பலாக வந்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்டேன். அவர்கள் மீண்டும் தனி விமானத்தில் மும்பைக்கு சென்றுவிட்டனர். கட்சி தாவல் தடை சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது, அதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். அந்த சட்டத்தின் நோக்கத்தை காப்பாற்றும் வகையில் நான் செயல்படுகிறேன்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து அந்த மாநில அரசுக்கு எதிராக மனு கொடுத்தனர். அவர்கள் கட்சி விரோத செயலில் ஈடுபட்டுள்ளதால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி அக்கட்சியின் கொறடா சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையில் அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

எம்.பி.யாக இருந்த சரத்யாதவ் வேறு கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார். இதன் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்ய கோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடிதம் வழங்கியது. அதன் அடிப்படையில் சரத்யாதவ் எம்.பி.யை வெங்கையா நாயுடு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. கட்சி விரோத செயலை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் அவசர கதியில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியை சேர்ந்த ஆர்.சங்கர், ராணிபென்னூர் தொகுதியில் இருந்து சட்ட சபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கடந்த ஜூன் மாதம், எனக்கு கடிதம் அனுப்பினார். அதில் தனது கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக கூறினார். அதை ஏற்று, சட்டசபையில் அவருக்கு காங்கிரஸ் வரிசையில் இருக்கை ஒதுக்கும்படி செயலாளருக்கு உத்தரவிட்டேன்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அவர் கவர்னரை சந்தித்து, இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், பா.ஜனதா ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கடிதம் கொடுத்தார். அந்த கடிதங்களை கவர்னர் எனக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா என்னை நேரில் சந்தித்து, ஆர்.சங்கர் காங்கிரஸ் உறுப்பினராக இருப்பதால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி என்னிடம் கடிதம் கொடுத்தார்.

அதை ஏற்று, ஆர்.சங்கர் எம்.எல்.ஏ.வை இன்று (நேற்று) முதல் 15-வது சட்டசபை பதவி காலம் வரை அதாவது 2023-ம் ஆண்டு மே மாதம் வரை தகுதி நீக்கம் செய்துள்ளேன். அதே போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோகாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, அதானி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மகேஷ் குமடள்ளி ஆகியோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், கொறடா உத்தரவை மீறியதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அக்கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா என்னிடம் கடிதம் வழங்கினார். இது ஏற்கனவே நிலுவையில் இருந்தது.

இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு நோட்டீசு அனுப்பினேன். அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி ஆகியோர் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த 15-வது சட்டசபை பதவி காலம் முடியும் வரை இந்த சபையின் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது. மீதமுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் அவர்கள் மீதான தகுதி நீக்கம் செய்ய கோரிய புகார் மீது முடிவை அடுத்த சில நாட்களில் அறிவிப்பேன். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.

ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளியின் ராஜினாமா கடிதங்களையும் நிராகரித்து விட்டேன்

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

சபாநாயகரின் இந்த உத்தரவுப்படி 2023-ம் ஆண்டு மே மாதம் வரை இந்த 3 பேரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் அரசு துறைகளில் ஆதாயம் தரும் எந்த பதவியையும் வகிக்க முடியாது. ஒருவேளை இந்த சட்டசபை கலைக்கப்பட்டு, அதற்கு முன்பாகவே தேர்தல் வந்தால் தேர்தலில் போட்டியிட தடை இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும், தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Next Story