ஒப்பந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரி அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் திடீர் போராட்டம்


ஒப்பந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரி அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2019 4:30 AM IST (Updated: 27 July 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரி அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். சீட்டு பதிவாளர், அட்டெண்டர், சுகாதார பணியாளர் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் சுகாதார பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினக்கூலி ஊழியர்கள் நேற்றுக்காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவமனை வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது புதிதாக ஆட்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்த உடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரை சந்தித்து வலியுறுத்தும்படி கூறினர்.

அதனை ஏற்று அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் நேற்று மதியம் மருத்துவமனை முன்பு தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்க தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். போராட்டத்தில் நிர்வாகிகள் முனுசாமி, நாகராஜன், கணேஷ், ராமையா, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் உள்ள பணிகளில் தனியாரை புகுத்தக்கூடாது, குறைவான தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை வெளியேற்றக்கூடாது, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர் நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

Next Story