டீசல் ஏற்றி வந்த, டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய புகையால் பீதி


டீசல் ஏற்றி வந்த, டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய புகையால் பீதி
x
தினத்தந்தி 29 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் இருந்து புகை வெளியேறியதால் பீதி ஏற்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்ட மக்களுக்கு கோவை, ஈரோடு உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களில் இருந்து தினமும் சரக்கு லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் நகரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் இருந்து டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து டீசல் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கூடலூர் ஹெல்த்கேம்ப் தலைமை தபால் நிலையம் அருகே திடீரென டேங்கர் லாரியின் டயர்களில் இருந்து புகை வெளியேறியது. இதை கண்ட பிற வாகன ஓட்டிகள் பீதி அடைந்து கூச்சலிட்டனர். உடனே டேங்கர் லாரியை அதன் டிரைவர் நிறுத்தினார். இருப்பினும் புகை வந்து கொண்டே இருந்தது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் டேங்கர் லாரியின் டயர்களில் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதைத்தொடர்ந்து புகை வருவது நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து டேங்கர் லாரி அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சமவெளி பகுதியில் இருந்து பெட்ரோல், டீசல் கொண்டு வரும் லாரி டிரைவர்கள் மலைப்பிரதேசத்தில் வரும்போது பிரேக்கை அதிகளவு பயன்படுத்தி ஓட்டுகின்றனர்.

இதனால் லாரி என்ஜின் அதிகளவு சூடாகி புகை வந்துள்ளது. இருப்பினும் டீசல் ஏற்றி வந்த லாரி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் வந்து புகையை கட்டுப்படுத்தினர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்

Next Story