தேனி அல்லிநகரத்தில், கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அல்லிநகரத்தில் கஞ்சா, மதுபோதைக்கு அடிமையான சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தேனி,
தேனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 9-ம் வகுப்புக்கு மேல் படிக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான். சில ஆண்டுகள் ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து வந்தான். இந்நிலையில் அவனுக்கு கஞ்சா பழக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மதுப்பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
சிறு வயதிலேயே கஞ்சா, மது போதைக்கு அடிமையானதால் அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவர் தூக்கில் தொங்குவதை பார்த்த உறவினர்கள் இதுகுறித்து அல்லிநகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சிறுவன் வசித்த பகுதியில் கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாக கூறப்படுகிறது. பல முறை போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் மீண்டும், மீண்டும் அப்பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. அனுமதியின்றி மதுவிற்பனையும் அப்பகுதிகளில் நடந்து வருகிறது. இதனால், சிறு வயதிலேயே போதைப் பழக்கத்துக்கு மேலும் பலர் அடிமையாகும் அபாயம் உள்ளது. எனவே, போலீசார் இப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதியை சேர்ந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story