ஏலக்கடைகள் நடத்த அனுமதிக்க கோரி - முஸ்லிம் சங்கத்தினர் போராட்டம்


ஏலக்கடைகள் நடத்த அனுமதிக்க கோரி - முஸ்லிம் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2019 4:00 AM IST (Updated: 1 Aug 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஏலக்கடைகள் நடத்த அனுமதிக்க கோரி முஸ்லிம் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பழனி, 

பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பழனியில் போராட்டம் நடந்தது. இதற்கு சங்க துணைத்தலைவர் முகமதுகைசர் தலைமை தாங்கினார். செயலாளர் நாசர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ்நிலையம், ஆர்.எப்.ரோடு வழியே ஊர்வலமாக வந்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்புள்ள சாலையில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து சங்க துணைத்தலைவர் கூறுகையில், பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் பழனி சுப்பிரமணி சாலையில் உள்ளது. மானிபக்காடு எனப்படும் இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் ஏலக்கடைகள் நடத்தப்பட்டது. பின்னர் அந்த இடத்தை காலி செய்துவிட்டு, இட்டேரி சாலையில் புதிதாக நகராட்சி சார்பில் ஏலக்கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாததால், மீண்டும் மானிபக்காடு பகுதிக்கு சில கடைக்காரர்கள் திரும்பி வந்தனர்.

எனினும் வரி பாக்கி, உரிமம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி ஏலக்கடைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி சார்பில் மானிபக்காடு கடைகளுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால் அங்குள்ள கடைக்காரர்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மானிபக்காடு பகுதியில் அரசு உரிமம் பெற்று ஏலக்கடைகள் நடத்தலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பழனி நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மானிபக்காடு பகுதியில் ஏலக்கடைகள் நடத்த அனுமதி கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

பின்னர் பழனி சப்- கலெக்டர் உமா தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஏலக்கடைகள் நடத்துவதற்கான உரிமத்தை சங்க நிர்வாகிகள் பெற்ற பின்னர் ஏலக்கடைகள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story