சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு காங்கிரஸ் சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல்

சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு,
சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே இந்த மனு மீதான விசாரணையின்போது தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் “கேவியட்” மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். காங்கிரசை சேர்ந்த மேலும் 2 பேர் கட்சி கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த அந்த 17 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் 2023-ம் ஆண்டு மே மாதம் வரை சட்டசபை உறுப்பினராக தடை விதித்து சபாநாயகர் தீர்ப்பு கூறினார். இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆர்.சங்கர் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரினர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மீதமுள்ள காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர், ஸ்ரீமந்த்பட்டீல், சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், பைரதி பசவராஜ், முனிரத்னா, ஆனந்த்சிங், ரோஷன் பெய்க், சிவராம் ஹெப்பார், பிரதாப்கவுடா பட்டீல், பி.சி.பட்டீல் 11 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா உள்ளிட்ட 3 பேரும் என மொத்தம் 14 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
தங்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த கர்நாடக சட்டசபை சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர். இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விசாரணையின்போது, தங்களின் வாதத்தை கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சபாநாயகர்
இந்த வழக்கில் சபாநாயகர் சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாட வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுத்த சபாநாயகர் ராஜினாமா செய்துவிட்டதால், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் சபாநாயகரின் நடவடிக்கையை ஆதரித்து காங்கிரஸ் வாதாட உள்ளது. அதற்காக தான் அக்கட்சி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story