குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு

குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணி நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிமராமத்து திட்டப்பணிகள் அந்தந்த ஏரிகளின் பாசனதாரர்களை கொண்டு சங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக விவசாய சங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைக்குரிய பட்டியல் வழங்குவதற்கு சங்கத்தின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கவும், ஜி.எஸ்.டி. கணக்கு தொடங்கவும், பான் அட்டை வாங்குவதற்கும் பதிவுத்துறையில் பதிவு செய்த சங்க பதிவிற்கான சான்றிதழை பெறவும் வங்கி அதிகாரிகள், வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் பணியாற்றும் அலுவலர் ஆகியோர் இப்பணிகள் தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிகள் நடைபெறும் ஏரிகளில் ஏரியின் எல்லைகளை உடனடியாக நில அளவைத்துறையினர் அளவீடு செய்ய வேண்டும். அதோடு இந்த பணிகளை விரைந்து முடிக்க அந்தந்த துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை கீழ்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜவகர், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story