தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு


தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 20 Aug 2019 3:00 AM IST (Updated: 20 Aug 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.

ஏரல் தாலுகாவை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அ.ம.மு.க. சார்பில் கலெக்டரிடம் பலர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள வடகால், தென்காலில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில் வாழை, வெற்றிலை அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. அந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி வறட்சி நிலவியது. தற்போது பாபநாசம் அணையில் 110 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் பகுதியில் உள்ள வாழை, வெற்றிலை கருகும் முன்பு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சகாயராஜா மற்றும் சிலர் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றின் பாசனத்தை நம்பி பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக, கலியாவூரில் இருந்து சேர்ந்தப்பூமங்கலம் வரை அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த 5 மாதங்களாக விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. தற்போது அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. எனவே தண்ணீர் இன்றி காய்ந்து வரும் வாழைகளை காப்பாற்ற உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறி உள்ளார்.

திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த ரவி மனைவி லேட்டா என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் கடந்த 2016-ம் ஆண்டு மணப்பாடு கடற்கரை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு கடன் வாங்கினேன். வட்டி பணத்தை சரியாக செலுத்த முடியாததால் சிலர் எனது வீட்டுக்கு வந்து என்னையும், எனது குழந்தையையும் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி வைத்து விட்டனர். அதன்பிறகு நான் எனது குழந்தைகளுடன் அமலிநகரில் குடியேறினேன். பின்னர் வட்டி பணத்தை சரியாக செலுத்தினேன். ஆனால் அதன்பிறகும் அந்த நபர் வீட்டை தர மறுக்கிறார். அவர் கூடுதல் பணம் கேட்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர உதவ வேண்டும் என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கோவில்பட்டி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக முன்அறிவிப்பு வழங்கி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கடந்த 15-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் எழுதாத வெற்று பக்கத்தில், கூட்டத்தில் பங்குபெறாத நபர்களிடம் இருந்து கையெழுத்து பெற்று, பொதுமக்களின் கையெழுத்துகளை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் பருவமழை காலத்துக்கு முன்பு மானாவாரி குளங்களை தூர்வார வேண்டும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறுமுகமங்கலம், சிவத்தையாபுரம் செங்குளம், பேய்குளம், பெட்டைகுளம் உள்ளிட்ட குளங்களை வரும் பருவமழை காலத்துக்கு முன்பு ஆழப்படுத்தி கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சியை சேர்ந்த காசி மனைவி ஆறுமுகத்தாய் கொடுத்த மனுவில், எனது கணவர் இறந்து விட்டார். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன், எனது வங்கிக்கணக்குக்கு அனுப்பும் பணத்தை சேமித்து வைத்து இருந்தேன். அந்த பணம் மொத்தம் ரூ.70 ஆயிரம் இருந்தது. எனது வங்கிக்கணக்கு விவரம் தெரிந்த ஒருவர், அதில் இருந்த பணத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் வாங்கி செலவு செய்து உள்ளார். தற்போது எனது வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் தான் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம் திருப்பி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகரில் ஆண்டாள் சாலை திரேஸ்புரம் வரை செல்லும் பக்கிள் ஓடை பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள பக்கிள் ஓடையின் முகப்பு பகுதி மண்மேடாக இருப்பதால் சாக்கடை கழிவு கடலில் கலக்காமல் அங்கேயே தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, பல தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. பருவமழை தொடங்கும் முன்பு இதை தூர்வார வேண்டும் என்று கூறி இருந்தார்.

Next Story