தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 13 பேர் கைது: நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண்


தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 13 பேர் கைது: நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 8:35 PM GMT)

தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி,

தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்தவர் பச்சைக்கண்ணன். இவருடைய மகன் சிவக்குமார் (வயது 41). இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் டார்லிங் நகரில் வசித்து வந்தார். இங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு கோரம்பள்ளம் பகுதியில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிவக்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக வந்த சிவக்குமாரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக, அவருடைய தம்பி ராஜேஷ் (29) மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவக்குமாரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜேசுபாலன் மகன் பீட்டர் (24), அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்த சுடலையாண்டி மகன் வேல்சங்கர் (26), ஆதிப்பாண்டி மகன் ராசுகுட்டி என்ற கனகராஜ், பெத்துராஜ் மகன் விக்னேசுவரன் (30), ஸ்ரீவைகுண்டம் நட்டாத்தியை சேர்ந்த கடற்கரை மகன் பொன்சரவணபெருமாள் (27), கோரம்பள்ளத்தை சேர்ந்த முருகசெல்வம் மகன் விக்னேஷ் (23), ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கம் (21), மாசிலாமணிபுரத்தை சேர்ந்த மூக்கன் மகன் கந்தவேல் (23), முள்ளக்காட்டை சேர்ந்த பொன்முருகன் மகன் பாலசுப்பிரமணியம் (26), பேரூரணி முருகன் மகன் மருதவேல் (27), பேட் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ் (25), குலையன்கரிசலை சேர்ந்த சத்தியராஜ் (25), அண்ணாநகரை சேர்ந்த வெள்ளச்சாமி மகன் பூபேஷ் கண்ணன்(27) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜேஷ் உள்ளிட்ட சிலரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜேஷ், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஜோதிபாஸ்கர் மகன் சங்கரமூர்த்தி (26), கே.வி.கே.நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் பாலசுப்பிரமணியன் (25), யாதவர் தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்வக்குமார் (29) ஆகிய 4 பேரும் நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி முன்னிலையில் நேற்று மாலையில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி உத்தரவிட்டார்.

இதையடுத்து தென்பாகம் போலீசார் சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story