ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2019 3:45 AM IST (Updated: 23 Aug 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல், 

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி ப.சிதம்பரம் கைதை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி முன்னிலை வகித்தார். அப்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தையும் காங்கிரஸ் கட்சியினர் தீவைத்து எரித்தனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் ஜபருல்லா, அரபுமுகமது, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர் கள் கலந்து கொண்டனர்.

Next Story