சேலத்தில், ஜவுளி வியாபாரி மனைவி கொலையா? வீட்டில் ரத்தக்கறை படிந்திருந்ததால் பரபரப்பு

சேலத்தில் வீட்டில் ரத்தக்கறை படிந்திருந்ததால் ஜவுளி வியாபாரி மனைவி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி,
சேலம் சின்னதிருப்பதி சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர், குகை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 35). இவர்களுக்கு ரவி கிருஷ்ணன் (13) என்ற மகன் உள்ளான். அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு அங்குள்ள ஒரு வீட்டில் டியூசனுக்கு சென்ற ரவி கிருஷ்ணன், அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் தனது தாய் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், வீட்டில் உள்ள அறையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் வீட்டில் இருந்த தாய் தமிழ்செல்வியை யாரேனும் அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இது பற்றி உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்தவர்களிடம் ரவி கிருஷ்ணன் தெரிவித்தான். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் தமிழ்ச்செல்வியை பற்றிய விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. மேலும், சின்னதிருப்பதி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்ச்செல்வியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர் என்ன ஆனார்? என்பது மர்மமாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வீட்டில் படிந்திருந்த ரத்தகறையால், என்னை காப்பாத்துங்க..! என்று வாசகம் எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தனியாக இருந்த தமிழ்செல்வியை மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்கேக்கின்றனர். அதேசமயம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதா? என்றும், அதனால் மனைவியை ஹரிகிருஷ்ணனே கத்தி அல்லது அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது உடலை மறைவான இடத்தில் வீசினாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story