திண்டிவனம் அருகே, கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய லாரி - டிரைவர் உயிர் தப்பினார்


திண்டிவனம் அருகே, கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய லாரி - டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கல்குவாரி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கியது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரம்மதேசம்,

திண்டிவனம் அருகே உள்ள கீழ் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் மகன் ரகுராமன்(வயது 35). டிரைவரான இவர் அதே ஊரை சேர்ந்த குமரவேல் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஓட்டி வருகிறார். நேற்று காலை ரகுராமன் அதே ஊரின் எல்லையில் உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டு கீழ் அருங்குணம் நோக்கி புறப்பட்டார். வரதன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியின் மேல்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக 100 அடி ஆழம் கொண்ட கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது 20 அடியில் உள்ள பாறையில் சிக்கி அந்த லாரி அந்தரத்தில் தொங்கியது. டிரைவர் ரகுராமனின் கால் லாரி கதவில் சிக்கிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் கீழே உள்ள பள்ளத்தில் விழாமல் தலைகீழாக அந்தரத்தில் தொங்கினார்.

இதைபார்த்த கல்குவாரி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கும், பிரம்மதேசம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே லாரி கல்குவாரியில் அந்தரத்தில் தொங்குவது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.

தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் முகுந்தன், திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தனகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான வீரர்கள் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி டிரைவரையும், அந்த லாரியையும் இரும்பு சங்கிலியால் கட்டி மீட்டனர்.

பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய டிரைவர் ரகுராமன், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story