தமிழகத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மலிவு விலை மருந்தகம் திறக்கப்படும் - மத்திய மந்திரி சதானந்த கவுடா தகவல்


தமிழகத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மலிவு விலை மருந்தகம் திறக்கப்படும் - மத்திய மந்திரி சதானந்த கவுடா தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:30 AM IST (Updated: 30 Aug 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மலிவு விலை மருந்தகம் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பணப்பாக்கம் ஊராட்சி குருத்தானமேடு கிராமத்தில் மலிவு விலை மருந்துப்பொருட்கள் சேமிப்புக்கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று இந்த சேமிப்பு கிடங்கை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமரின் பாரதீய மலிவு விலை மருந்தகம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 5 வினியோக மையங்களுடன், புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த சேமிப்புக்கிடங்கும், தென்னிந்தியாவில் உள்ள மலிவு விலை மருந்தகங்களுக்கு மருந்துகளை வினியோகிப்பதற்கு முக்கிய மையங்களாக திகழும்.

மலிவுவிலை மருந்தகத்தில் 900-க்கும் மேற்பட்ட மருந்துகளும், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய 154 பொருட்களும், வெளிச்சந்தையைவிட 50 முதல் 90 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 550 மலிவு விலை மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த மருந்தகம் திறக்கப்படும்.

நாடு முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட மலிவு விலை மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 2018-2019-ம் ஆண்டில் ரூ.315.70 கோடிக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்கள் மூலம் பொதுமக்களின் பணம் ரூ.2,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை மருந்தகம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளjanaushadhi sugam என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்தகம் உள்ள இடம், அங்கு செல்வதற்கான வரைபடம், விலை வித்தியாசம், ஒட்டுமொத்த சேமிப்பு போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story