திருவள்ளூர் வேளாண் திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு


திருவள்ளூர் வேளாண் திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2019 11:00 PM GMT (Updated: 30 Aug 2019 4:11 PM GMT)

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவர் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் கொழுந்தலூரில் உள்ள வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்று வரும் நெல் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நெல்பயிர்களையும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ள 10 ஆயிரம நெட்டை ரக தென்னங்கன்றுகளையும் பார்வையிட்டார்.

மண் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு 8 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தக்கை பூண்டு சாகுபடியையும், பல்வேறு வகையான நெல் ரக சாகுபடி செய்து வைக்கப்பட்ட நாற்றுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பூண்டி தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 2 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடிலில் உள்ள மிளகாய் சாகுபடியையும் நேரில் சென்று பார்வையிட்டு அதுகுறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பூண்டி ஒன்றியம் வேளகாபுரம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல்துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தில் 400 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் 50 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியில் அனைத்து வேளாண் பொருட்களை உலர்த்தி சந்தைக்கு அனுப்புவதற்கு ஏதுவாக உலர்த்தப்படும் கூடாரத்தை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து குருபுரம் ஊராட்சியில் சூரிய சக்தியால் இயங்கும் மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள பம்ப்செட்டையும் கலெக்டர் பார்வையிட்டு அது குறித்த விவரங்களை அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் 300 ஹெக்டேர் பரப்பில் நேரடி நெல்விதைப்பு நடப்பு சம்பா பருவத்தில் விதைப்பு செய்யப்பட்டிருப்பதையும் நேரில் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் வயலில் இறங்கி நெல்பயிர்களை தொட்டு பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை வழங்கினார்.

வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு எந்த வகையான எந்திரங்கள் வழங்கப்படுகிறது என விவசாயிகளுடன் சென்று நேரில் கள ஆய்வு செய்தார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நேரடி கலந்தாய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாண்டியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப்ராவ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கருப்பசாமி, வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஷ், பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story