வெளி மாநில ஆர்டர்கள் குவிந்தன: பட்டாசு தயாரிக்க தொழிலாளர்கள் தட்டுப்பாடு


வெளி மாநில ஆர்டர்கள் குவிந்தன: பட்டாசு தயாரிக்க தொழிலாளர்கள் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 31 Aug 2019 5:23 AM IST (Updated: 31 Aug 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த தொழில் தொடர்ந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை சந்தித்து வந்த நிலையின் உச்சகட்டமாக 3 மாதங்கள் உற்பத்தியை நிறுத்தி ஆலைகளை மூட வேண்டிய நிலை உருவானது.

சில பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தாலும் இந்த தீபாவளிக்கு வட மாநிலங்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக மத்தியபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அசாம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மொத்த வியாபாரிகள் ஆர்டர் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக வாங்குவோரும் இப்போதே ஆர்டர் கொடுக்க தொடங்கி விட்டனர். இதனால் ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் நடந்து வருகிறது. பல ஆலைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்குகின்றன.

வெம்பக்கோட்டை பகுதியில் தீபாவளி விற்பனைக்காக ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந்தேதி முதல் கடைகள் திறக்கப்படும். இந்த ஆண்டும் அதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஆலைகளில் இருந்து வட மாநிலங்களுக்கு பட்டாசு பண்டல்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வழக்கமாக குடோனுக்கு வந்து அங்கிருந்துதான் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு குடோனுக்கு வர வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு தேக்கமில்லாமல் விற்பனை நடக்கிறது. மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையால் விற்பனை பாதிக்கப்பட்டு ஒரு சில இடங்களில் தேங்கி இருந்த பட்டாசுகளும் இப்போது விற்பனையாகி வருகிறது.

பட்டாசு தயாரிப்பு மட்டுமின்றி அதனுடன் தொடர்புடைய அனைத்து பொருட்களின் தயாரிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக கொடுக்கப்படும் ஊதியத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக ஊதியம் கிடைப்பதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் மழை பொய்த்து விவசாயம் நடைபெறாததால் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வெம்பக்கோட்டை பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு வருகின்றனர். எனினும் ஆட்கள் தேவை அதிகரித்து இருப்பதாகவும் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படு கிறது.

மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பட்டாசு விற்பனை விலையும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. இது தவிர்க்க இயலாதது என்று பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story