மராட்டியத்தில் ஊழல் வழக்கில் 2 முன்னாள் மந்திரிகளுக்கு ஜெயில் ரூ.100 கோடி அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி


மராட்டியத்தில் ஊழல் வழக்கில் 2 முன்னாள் மந்திரிகளுக்கு ஜெயில் ரூ.100 கோடி அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 31 Aug 2019 11:15 PM GMT (Updated: 31 Aug 2019 7:53 PM GMT)

மராட்டியத்தில் வீட்டு வசதி ஊழல் வழக்கில் சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மற்றொரு முன்னாள் மந்திரி உள்பட 47 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, சிவசேனாவை சேர்ந்த சுரேஷ் ஜெயின் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தார்.

அப்போது ஜல்காவ் புறநகரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 5 ஆயிரம் வீடுகளை கட்ட ‘கார்குல்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்த பணியை மந்திரி சுரேஷ் ஜெயின் தனது ஆதரவாளரான கட்டுமான அதிபருக்கு வழங்கினார். இதில் ரூ.29 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக 2006-ம் ஆண்டு ஜல்காவ் நகராட்சி கமிஷனராக இருந்த பிரவீன் கேதம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சுரேஷ் ஜெயின் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் முன்னாள் மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குலாப்ராவ் தியோகர் என்பவரும் கைதானார்.

இவர்கள் மட்டுமின்றி மேலும் 46 பேருக்கு இந்த ஊழலில் தொடர்பு இருந்தது. இந்த வழக்கை துலே மாவட்ட செசன்சு கோர்ட்டு விசாரித்து வந்தது.

வழக்கின் விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று நீதிபதி சிருஷ்டி நீல்கந்த் தீர்ப்பு வழங்கினார். அப்போது முன்னாள் மந்திரிகள் சுரேஷ் ஜெயின் மற்றும் குலாப்ராவ் தியோகர் உள்பட 48 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார்.

பின்னர் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் மந்திரி சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் முன்னாள் மந்திரி குலாப்ராவ் தியோகருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற 46 குற்றவாளிகளுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைத்தது.

இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த முன்னாள் மந்திரிகள் உள்பட அனைவரும் நேற்று தீர்ப்பின் போது கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். தீர்ப்பை தொடர்ந்து அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முன்னாள் மந்திரிகளான சுரேஷ் ஜெயின் ஏற்கனவே 1 ஆண்டும், குலாப்ராவ் தியோகர் 3 ஆண்டும் சிறைவாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story