மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பா.ஜனதா ஆட்சியில் 4 சதவீதமாக சரிந்து விட்டது - நாராயணசாமி குற்றச்சாட்டு


மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பா.ஜனதா ஆட்சியில் 4 சதவீதமாக சரிந்து விட்டது - நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Sept 2019 5:15 AM IST (Updated: 2 Sept 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜனதா ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக சரிந்துவிட்டது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காரைக்கால் வந்தார். காரைக்கால் காசாகுடி பகுதியில் ஸ்ரீ கண்ட சிவாச்சாரியாரின் நூதன பஞ்சலோக விக்கிரகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி, இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும் எண்ணமின்றி அரசியல் கட்சி தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். மாநிலங்களில் கட்சி, ஆட்சி பாகுபாடு பார்த்து நரேந்திரமோடி நிதி ஒதுக்கி வருகிறார். குறிப்பாக, மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை புதுச்சேரிக்கு வழங்குவதில்லை.

இருந்தபோதிலும் நிதி நிலையை கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து மக்களும் பாராட்டும் விதமாக பட்ஜெட்டை அறிவித்துள்ளோம். அதில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்ப்பவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு துபாய், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ளன. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பணப்புழக்கமின்மை, கட்டுமான பணிகள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது 9 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜனதா ஆட்சியில் 4 சதவீதமாக சரிந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவதாக மோடி வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், கடந்த 5 ஆண்டு காலத்தில் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story