முன்னாள் மந்திரி சுரேஷ் ஜெயினுக்கு ஜெயில்: நீதித்துறை மீதான நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது

வீட்டு வசதி ஊழலில் முன்னாள் மந்திரி சுரேஷ் ஜெயினுக்கு தண்டனை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அன்னா ஹசாரே நீதித்துறை மீதான நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது என்றார்.
புனே,
மராட்டியத்தில் 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, சிவசேனாவை சேர்ந்த சுரேஷ் ஜெயின் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தார்.
அப்போது ஜல்காவ் புறநகரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் 5 ஆயிரம் வீடுகளை கட்ட ‘கார்குல்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில், மந்திரி சுரேஷ் ஜெயின் ரூ.29 கோடி முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மந்திரி குலாப்ராவ் தியோகரும் கைதானார்.
இந்த வழக்கை விசாரித்த துலே மாவட்ட செசன்சு கோர்ட்டு, முன்னாள் மந்திரி சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் முன்னாள் மந்திரி குலாப்ராவ் தியோகருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 46 குற்றவாளிகளுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைத்தது.
இந்த ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவரான காந்தியவாதி அன்னா ஹசாரே இதுகுறித்து நேற்று வெளியிட்ட கருத்தில் கூறியதாவது:-
இந்த தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தி உள்ளது. எவ்வளவு ஆளுமை மிக்கவராக இருந்தாலும், யாரும் சட்டத்திற்கு மேலானர்வர் இல்லை என்ற செய்தியை இந்த உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த வழக்கை நாங்கள் நீண்ட காலமாகப் பின்தொடர்ந்தோம். ஊழல் கறைபடிந்த அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை குழு அமைக்க அரசு தயாராக இல்லாதபோது அதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டோம். இறுதியாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு சுரேஷ் ஜெயினின் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story