வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து 30 பவுன் நகை மீட்பு


வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து 30 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 6 Sept 2019 3:45 AM IST (Updated: 6 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து 30 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

சேலம், 

சேலம் மாநகருக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பறித்துச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி தனிப்படை போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை பல இடங்களில் தேடி வந்தனர். சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வீராணம் பகுதியில் வாகன சோதனை நடத்திய போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து அவர்களின் கை முறிந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (வயது 24), சரவணன் (22) என்பதும், இருவரும் வீராணம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், தினேஷ்குமார் ஆகியோரின் செல்போன்களை பறித்து வந்துள்ளதும் தெரிய வந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்திய போது, இவர்களுடன் சேலம் வேடுகாத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கேசவன் (29) என்பவருடன் சேர்ந்து, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அதன்படி சொர்ணபுரியை சேர்ந்த சந்திரா (44), அதே பகுதியை சேர்ந்த கோமதி (60), சூளைமேட்டை சேர்ந்த சாந்தா (58), கன்னங்குறிச்சியை சேர்ந்த தேவி, மகாலட்சுமி உள்ளிட்ட பல பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துள்ளனர்.

இதையொட்டி தலைமறைவாக இருந்த கேசவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர்களிடம் இருந்து மொத்தம் 30 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது, பிரசாந்த், சரவணன், கேசவன் ஆகிய 3 பேரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, நண்பர்களாக பழகி உள்ளனர். அப்போது சிறையில் இருந்து வெளியில் வந்ததும் 3 பேரும் கூட்டாக சேர்ந்து வழிப்பறியில் ஈடுபடுவது என்று திட்டம் போட்டு உள்ளனர்.

அதன்படி சிறையில் இருந்து வெளியில் வந்த இவர்கள், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை வழிப்பறி செய்து வந்துள்ளனர் என்று கூறினர்.

Next Story