ஆரல்வாய்மொழி அருகே பள்ளிக்கூட வேனின் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு ; 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


ஆரல்வாய்மொழி அருகே பள்ளிக்கூட வேனின் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு ; 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:45 AM IST (Updated: 13 Sept 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே பள்ளிக்கூட வேனில் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 20 மாணவ- மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களை வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.

நேற்று காலை 7.45 மணிக்கு அந்த பள்ளிக்கூட வேன் ஒன்று, ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர், கண்ணன்புதூர், சோழபுரம், மாதவலாயம் பகுதியில் இருந்து 20 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சண்முகபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கழன்று சாலையில் ஓடியது. இதைக்கண்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பயங்கர சத்தத்துடன் வேன் குலுங்கியவாறு சாலையில் சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் உள்ளே இருந்த மாணவர்கள் அபய குரல் எழுப்பினர்.

டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வேனை சாலையோரத்தில் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து டிரைவர், வேனில் இருந்து மாணவ-மாணவிகளை கீழே இறக்கினார். இதனையடுத்து, அந்த பள்ளியை சேர்ந்த மாற்று வாகனத்தின் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 20 மாணவர்களும் காயமின்றி உயிர் தப்பினர். தனியார் பள்ளிக்கூட வேனின் சக்கரங்கள் கழன்று ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story