புத்தாநத்தம் அருகே நள்ளிரவில் பரபரப்பு: கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து


புத்தாநத்தம் அருகே நள்ளிரவில் பரபரப்பு: கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 14 Sept 2019 3:15 AM IST (Updated: 14 Sept 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

புத்தாநத்தம் அருகே கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்ற லாரி நள்ளிரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மணப்பாறை, 

மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் மணப்பாறை வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தை அடுத்த கருஞ்சோலைப்பட்டி அருகே ஒரு வளைவு பகுதியில் லாரி திரும்ப முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், லாரியின் பின்பகுதியில் கோழிக்குஞ்சுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த தனித்தனி பிளாஸ்டிக் பெட்டிகள் அனைத்தும் சாலையில் சரிந்து விழுந்தன. அப்போது பல கோழிக்குஞ்சுகள் பிளாஸ்டிக் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் நசுங்கி செத்தன.

மேலும் அந்த பெட்டிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வெளியே வந்து சாலையில் குதிக்க தொடங்கின. அத்துடன் அவை சாலையில் துள்ளிக்குதித்து அங்கும், இங்குமாக அலைந்தன. நள்ளிரவில் கோழிக்குஞ்சுகள் சாலையில் கூட்டமாக திரிவதை பார்த்ததும் அந்த வழியாக வந்த பலரும் அந்த கோழிக்குஞ்சுகளை பிடித்துச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்துக்குள்ளான லாரியை அங்கிருந்து மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.

Next Story