அனுமதி இல்லாமல் இயங்கும் ஆழ்துளை கிணறுகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் - நல்லக்கண்ணு பங்கேற்பு


அனுமதி இல்லாமல் இயங்கும் ஆழ்துளை கிணறுகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் - நல்லக்கண்ணு பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 6:23 PM GMT)

செங்குன்றம் அருகே உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் ஆழ்துளை கிணறுகளை அகற்றக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்றார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே நகர், நாகாத்தம்மன் நகர், ஆட்டந்தாங்கல், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது.இந்த நிறுவனங்கள் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை திருடுவதால் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தனியார் தண்ணீர் நிறுவனங்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீரை உறிஞ்சி வரும் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றக்கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் நல்லூர் பொதுமக்கள் சார்பில் செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story