ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.

பென்னாகரம், 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த மாதம் 12-ந் தேதி வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைய தொடங்கியதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் பரிசல்களை இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் காவிரி ஆற்றில் குளிக்கக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறையினர் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 900 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் 120 அடியாக தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story