வெள்ள சேதம் தொடர்பாக பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல தேவை இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


வெள்ள சேதம் தொடர்பாக பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல தேவை இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வெள்ள சேதம் தொடர்பாக பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல தேவை இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசு அறிவிக்கும்

கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு சேதங்கள் உண்டானது. இதுகுறித்து நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய அரசு விரைவில் நிதி உதவியை அறிவிக்கும். இதற்காக அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல தேவை இல்லை.

கர்நாடகம் மட்டுமின்றி 7, 8 மாநிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டது. எந்த மாநிலத்திற்கும் மத்திய அரசு இன்னும் நிதி உதவி வழங்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் நிதி உதவியை மத்திய அரசு அறிவிக்கும். வெள்ள பாதிப்புகள் குறித்து முழு விவரங்களை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் விளக்கி கூறியிருக்கிறோம்.

சந்தேகம் வேண்டாம்

மத்திய குழுவும் கர்நாடகம் வந்து வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்துவிட்டு டெல்லி சென்றுள்ளது. அந்த குழு அறிக்கையை தயாரித்து சம்பந்தப்பட்ட மந்திரியிடம் வழங்கிவிட்டது. எங்களின் எதிர்பார்ப்பை விட அதிக நிதி உதவி கிடைக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வீடுகளை கட்ட முதல்கட்டமாக தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் கட்ட தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். நிவாரண பணிகள் நடைபெற்று வந்தாலும் கூட, எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நாங்கள் எதிர்க்கவில்லை

காங்கிரசாருக்கு எந்த வேலையும் இல்லாததால், விதான சவுதாவில் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு நல்லது நடக்கட்டும். காங்கிரசார் தங்களின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story