காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க விரும்பவில்லை தனித்து போட்டியிடவே கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர் தேவேகவுடா பேட்டி

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க நிர்வாகிகள் விரும்பவில்லை என்றும், இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிடவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தனித்து போட்டி
மாநிலத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் 15 தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மைசூருவில் தெரிவித்துள்ளார். ஏனெனில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 14 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்த போது, எவ்வளவு கஷ்டங்களை குமாரசாமி அனுபவித்துள்ளார் என்று எனக்கு தெரியும். அவர் அனுபவித்த கஷ்டங்களை வெளியே சொல்ல முடியாது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 30 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினேன். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் என்னிடம் வலியுறுத்தினார்கள். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க நிர்வாகிகள் விரும்பவில்லை. குமாரசாமியும் தனது மனதில் உள்ளதை தற்போது தெரிவித்திருக்கிறார்.
எத்தனை தொகுதிகளில்...
இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 15 தொகுதிகளிலும் போட்டியிடுவதா? எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து நாளை(அதாவது இன்று) குமாரசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கு முன்பு சோனியா, ராகுல் காந்தி கூறினால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்போம் என்று நானே கூறி இருந்தேன்.
ஆனால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க எங்களது கட்சியினர் விரும்பவில்லை. தனித்து போட்டியிடவே விரும்புகின்றனர். என்றாலும், கூட்டணி குறித்து காங்கிரஸ் தேசிய தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு எடுப்பார்கள். கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story