சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்த குட்டியானை, கிராமத்துக்குள் புகுந்தது; மீண்டும் தாயிடம் சேர்க்க வனத்துறை முயற்சி


சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்த குட்டியானை, கிராமத்துக்குள் புகுந்தது; மீண்டும் தாயிடம் சேர்க்க வனத்துறை முயற்சி
x
தினத்தந்தி 28 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 8:34 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்து வந்த குட்டியானை கிராமத்துக்குள் புகுந்தது. இந்த குட்டியானையை மீண்டும் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி, விளாமுண்டி, கடம்பூர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, புள்ளிமான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து குட்டியானை ஒன்று வழி தவறி கடம்பூர் அருகே உள்ள பவளக்குட்டை ஊருக்குள் நேற்று காலை புகுந்தது.

இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குட்டியானையை பார்த்தனர். பின்னர் அவர்கள் அந்த குட்டியானையை வனப்பகுதியில் உள்ள அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இந்த குட்டியானை பிறந்து 2 மாதமே ஆன ஆண் குட்டி ஆகும். இந்த குட்டியானது தாயிடம் இருந்து பிரிந்து வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விட்டது. குட்டியானையை வனப்பகுதியில் உள்ள அதன் தாயிடம் மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,’ என்றனர்.

Next Story