தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 28 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

கடத்தூர்,

கோபி நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபி நகரில், புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் மின்சார கம்பங்கள் அகற்றப்படும். இதனால் புதைவட மின்கம்பிகள் மூலமாக மின்சாரம் வழங்கப்படும். மேலும், நகராட்சியில் ரூ.52 கோடியே 50 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 6 மாதத்தில் முடிவடையும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது. மேலும், கோபியில் தூசுபடியாத தார்சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான 10 இடங்களில் விரைவில் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும், 4 மாதத்தில் உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட உள்ளன. கீரிப்பள்ளம் ஓடை சுத்தம் செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ஆணையாளர் தாணுமூர்த்தி, பொறியாளர் பார்த்தீபன், நம்பியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தம்பிசுப்பிரமணியம், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story