திருவையாறு காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


திருவையாறு காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:00 AM IST (Updated: 29 Sept 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தஞ்சாவூர்,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறப்பான நாளாகும். அமாவாசை தினம் சாதாரணமாக சனிக்கிழமைகளில் வந்தாலே விசே‌‌ஷமாக பார்க்கப்படும். இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் வந்தது மிகவும் விசே‌‌ஷமாகும்.

அதுவும் 20 ஆண்டுகளுக்கு பிறகு புரட்டாசி சனிக் கிழமையில் மகாளய அமாவாசை வந்ததால் அது சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. மகாளய அமாவாசை நாளில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள பு‌‌ஷ்ய மண்டப படித்துறையில் திரளான பக்தர்கள் கூடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகும்.

அதன்படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி பு‌‌ஷ்ய மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புனித நீராடுவதற்காக திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் நேற்றுஅதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள், ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் காவிரி படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகஅளவு சென்று கொண்டிருக்கிறது. இதனால் படித்துறையை விட்டு ஆழமான பகுதிக்கு பக்தர்கள் யாரும் சென்றுவிடாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்திருந்ததால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


Next Story