மணல் கடத்திய லாரி பறிமுதல்: தப்ப முயன்ற டிரைவர் மீது போலீசார் தாக்குதல்


மணல் கடத்திய லாரி பறிமுதல்: தப்ப முயன்ற டிரைவர் மீது போலீசார் தாக்குதல்
x
தினத்தந்தி 29 Sept 2019 3:45 AM IST (Updated: 29 Sept 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தபோது, தப்ப முயன்ற டிரைவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் போலீசார் இருவர் நேற்று மதியம் அரணாரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரணாரை பெட்ரோல் பங்க் பின்புறம் நின்றிருந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர். அதில், 6 யூனிட் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த லாரியின் டிரைவரை பிடிக்க போலீசார் முயன்றனர். ஆனால் அந்த டிரைவர் போலீசாரின் பிடியில் சிக்காமல் லாரியை அவசர, அவசரமாக இயக்கி கொண்டு தப்பினார். இதனை கண்ட போலீசார் உடனடியாக மோட்டார் சைக்கிளில் லாரியை பின்தொடர்ந்து வேகமாக சென்றனர். அப்போது அரணாரை கே.கே.நகருக்குள் லாரி புகுந்தபோது, அங்கு லாரி செல்வதற்கு வழியில்லாததால் டிரைவர், அங்கேயே லாரியை நிறுத்தி விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் போலீசார் அந்த டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுகா சாத்தான் பாறையை சேர்ந்த தங்கமணி மகன் சுனில்குமார்(வயது 31) என்பதும், புதுக்கோட்டை மாவட்டம் சங்கிலி பட்டியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அப்போது லாரி டிரைவர் சுனில்குமார் தப்பி ஓட முயற்சித்ததால், அவரை போலீசார் தாக்கினார்களாம்.

வீடியோ எடுத்த கல்லூரி மாணவி

அப்போது அதனை, அதே பகுதியை சேர்ந்த ஒரு முதுகலை கல்லூரி மாணவி தைரியமாக தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். இதனை கண்ட போலீசார் மாணவியிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோருக்கும், அக்கம், பக்கத்தினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து மாணவியின் பெற்றோர் விரைந்து வந்து போலீசாரிடம் செல்போனை திரும்ப கேட்டனர். அதற்கு போலீசார் உங்கள் மகள் இனி இவ்வாறு செய்யமாட்டேன் என எழுதி கொடுத்தால் தான் செல்போனை திருப்பி தருவதாக தெரிவித்தனர் இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் மாணவியின் செல்போனில் பதிவாகியிருந்த வீடியோவை அங்கிருந்த போலீசார் அழித்து விட்டனர். இது தொடர்பாக விசாரிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, செல்போனை திரும்ப ஒப்படைத்து விட்டு சென்றனர்.

லாரி டிரைவர் கைது

இதையடுத்து சுனில்குமாரை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூரில் சமீப காலமாக மணல் கடத்தி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த மணல் கடத்தலுக்கு புரோக்கராக அம்மாபாளையத்தை சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Next Story