கோவை சாய்பாபா காலனியில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் வைர நகைகள் கொள்ளை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


கோவை சாய்பாபா காலனியில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் வைர நகைகள் கொள்ளை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 8:44 AM IST)
t-max-icont-min-icon

கோவை சாய்பாபா காலனியில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இடிகரை,

கோவை சாய்பாபா காலனி, பாரதிபார்க் ராஜா அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 72). தொழில் அதிபர். இவர் எந்திரங்களுக்கு தேவையான வால்வுகளை தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

தனது பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் முதல் மாடியில் மகன், மருமகள் தங்கி இருக்கிறார்கள். நாராயணசாமி கீழ் தளத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று முதல்மாடிக்கு வந்த கொள்ளையர்கள், வீட்டு கதவில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு ‘சென்சார்’ கருவிக்கான வயரை துண்டித்தனர். பின்னர் எதிர்நோக்கி இருந்த கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி வைத்தனர். அதன்பின்னர் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். முதல் மாடியில் உள்ள அறையில் ஆட்கள் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த நிலையிலும், நைசாக மற்றொரு அறைக்குள் புகுந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாள், கோவை மத்திய பகுதி உதவி கமிஷனர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாயும் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த வாரம் தொழில் அதிபர் வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் நகை திருட்டு போனது. ஒரே கும்பலை சேர்ந்தவர்களின் கைவரிசையா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களாக திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்து திருட்டு குற்றங்களை தடுக்குமாறு பொதுமக்கள் போலீசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story