தடையில்லா சான்று பெறாமல் நீர்நிலைகளில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


தடையில்லா சான்று பெறாமல் நீர்நிலைகளில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 29 Sep 2019 7:46 AM GMT (Updated: 29 Sep 2019 7:46 AM GMT)

தடையில்லா சான்று பெறாமல் நீர்நிலைகளில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மாரியப்பன், இணை இயக்குனர்(வேளாண்மை) முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் இளஞ்செல்வி, முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

மகாராஜன்(கொட்டாரம்):- வெலிங்டன் ஏரியின் கிளை வாய்க்கால்களை தூர்வாரி, ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதவன்(கடலூர்):- மங்களூர், நல்லூர் ஒன்றியத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்க வேண்டும். பெண்ணையாற்று தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க மலட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் வழங்க வேண்டும்.

ராமலிங்கம்(அயன்குறிஞ்சிப்பாடி):- 17 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சித்தேரியை தூர்வாரி, ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் தாழ வாய்க்காலை தூர்வார வேண்டும்.

கலெக்டர்:- என்.எல்.சி. மூலம் ரூ.10 லட்சம் செலவில் தாழ வாய்க்கால் விரைவில் தூர்வாரப்பட உள்ளது.

ரவீந்திரன்(கீழ்அனுவம்பட்டு):- கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசன பகுதியில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து டெல்டா பாசன பகுதிகளை 5 மண்டலங்களாக பிரித்து ரூ.69 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அந்தந்த மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகள் இடம் பெறவில்லை. இதனால் கடலூர் மாவட்டம் டெல்டா பாசன பகுதி என்ற அந்தஸ்தை இழந்து விட்டதாக கருதுகிறோம் என்றார்.

பாலு(நெய்வாசல்):- வெள்ளியங்கால் ஓடையில் மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திருச்சின்ன புரம் வாய்க்காலுக்கு கீழ் உள்ள நான்குவான் வாய்க்காலில் உள்ள அடைப்பை அகற்ற வேண்டும்.

செல்வராஜ்:- காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, காவிரி நீரை தொழுதூர் அணைக்கட்டுக்கு கொண்டு வந்தால், அங்கிருந்து வெலிங்டன் ஏரிக்கும், பெலாந்துறை அணைக்கட்டுக்கும் தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

கலெக்டர்:- இது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. இது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

வெங்கடேசன்(கார்மாங்குடி):- மழைக்காலங்களில் என்.எல்.சி. உபரிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து, மேற்கு நோக்கி திருப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகதாஸ்(காவாலக்குடி):- கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத பெலாந்துறை அணைக்கட்டுக்கு வீராணம் ஏரியில் இருந்து பம்பிங் செய்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதையடுத்து பேசிய கலெக்டர் அன்புசெல்வன் ஏரி, குளம், பாசன மற்றும் வரத்து வாய்க்கால்கள் போன்றவற்றில் சாலை உள்ளிட்ட பிற துறைகளின் பணிகள் நடைபெறும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். தடையில்லா சான்று இல்லாமல் பணிகளை மேற்கொண்டு, அதன் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார். 

Next Story