ஏம்பலில் வாரச்சந்தை தொடக்கம் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்


ஏம்பலில் வாரச்சந்தை தொடக்கம் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 2019-09-30T01:32:33+05:30)

அரிமளம் அருகே ஏம்பலில் வாரச்சந்தை தொடங்கியதையடுத்து பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

அரிமளம்,

அரிமளம் ஒன்றியம் ஏம்பலில் செயல்பட்டு வந்த வாரச் சந்தை கடந்த 15 ஆண்டுகளாக இடம் பற்றாக்குறை காரணமாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஏம்பல் அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மீண்டும் சந்தை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஏம்பலில் சந்தை தொடங்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிதாக வாரச்சந்தை தொடங்குவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து நேற்று வாரச் சந்தை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா தலைமை தாங்கி வாரச்சந்தையை தொடங்கி வைத்து பேசுகையில், ஏம்பல் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்ற ஊர்களை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்உதாரணமாக செயல்படுகின்றனர். இவர்களின் செயல்பாடுகளை மற்றவர்கள் பின்பற்றும் வகையில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார்.

வாங்கி சென்றனர்

புதிதாக தொடங்கப்பட்ட சந்தையில் 50-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகள், மீன்கடைகள் இருந்தன. ஏம்பல் சுற்று வட்டாரத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சந்தை இல்லாத பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். விழாவில் அரசு அதிகாரிகள், முன்னாள் ஏம்பல் அரசு மேல்நிலை பள்ளி மாணவ சங்க பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள், நகரத்தார்கள். இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story