தொழில் வளர்ச்சி பின்தங்கியுள்ளதை மூடி மறைக்க முயற்சி - தமிழக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

தொழில் வளர்ச்சி பின்தங்கியுள்ளதை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி,
ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரித்தது ஜனநாயக படுகொலைக்கு சமமானதாகும். இந்தியா- பாகிஸ்தான் என பிரிந்த போது அம்பேத்கர் ஒரு கருத்தை கூறினார். அதாவது இந்தியாவோடு ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளை இணைப்பதும், காஷ்மீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுடன்இணைப்பதும் தான் பொருத்தமானது என்றார். அந்த கருத்தை இப்போது பா.ஜ.க.வின் நிலைபாட்டோடு சேர்த்து, அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கருத்து சொன்னதாக கூறுவது கண்டனத்திற்குரியது.
நாடு பிரிந்த போதே ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரித்திருக்க வேண்டும் என்று தான் அம்பேத்கர் சொன்னாரே தவிர, பா.ஜ.க.வின் நிலைபாட்டை ஆதரிக்கும் வகையில் அவர் பேசவில்லை. இப்படி வரலாற்றை திரித்து கூறும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதோடு, தொழிற்சாலைகள் முடக்கம் அடைந்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என தமிழக அரசு பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பை பெருக்க போகிறோம் என கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். ஆள்குறைப்பு செய்வதும், தனியார் மயமாக்குவதும் தான் பா.ஜ.க. அரசின் முக்கியமான செயல் திட்டத்தில் ஒன்று. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது. இதனை மூடி மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதாக தெரிகிறது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் தனபால், ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணை செயலாளர் ஞானதிலகர், மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு நடத்துமா என தெரியவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தான் உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என நான் நம்புகிறேன். தமிழகத்தில் குறிப்பிட்ட சில ரெயில்வே பாதைகளை தனியார் மயமாக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தனியார்மயமாதல் கூடாது என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் இதனை அலட்சியப்படுத்தும் வகையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தென்னக ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். நூற்றாண்டு பழமை கொண்ட விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story