ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம்: உதித்சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க ஐகோர்ட்டு முடிவு


ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம்: உதித்சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க ஐகோர்ட்டு முடிவு
x
தினத்தந்தி 2 Oct 2019 5:00 AM IST (Updated: 2 Oct 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் சிக்கிய மாணவர் உதித்சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக விசாரிக்க முடிவு செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் கடந்த 2 வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையே உதித்சூர்யா தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, போலீசில் அவர் சரண் அடையுமாறு அறிவுறுத்தி இருந்தது.

தலைமறைவாக இருந்த உதித்சூர்யாவின் குடும்பத்தினரை போலீசார் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிடித்து, தேனிக்கு அழைத்து வந்தனர். இங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி உதித்சூர்யாவையும், அவருடைய தந்தையையும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் உதித்சூர்யாவின் முன்ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

அதற்கு நீதிபதி, “ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சரண் அடைவதாக உறுதி அளித்திருந்தால் தற்போது இந்த மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்கலாம். ஆனால் மாணவர் சரண் அடையவில்லை. போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் முன்ஜாமீன் வழங்க இயலாது, என்றார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், “மனுதாரர் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அவர் தன்னுடைய தரப்பு தகவல்களை தெரிவித்துவிட்டார். அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே மாணவரின் வயது மற்றும் மனநலப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க வேண்டும்” எனக் கோரினார்.

இதை கேட்ட நீதிபதி, “ஆள்மாறாட்ட பிரச்சினைக்கு மாணவர் உதித்சூர்யாவின் தந்தைதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனவே உதித்சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கோர்ட்டு ஏற்றுக்கொள்கிறது. இதுதொடர்பான விசாரணை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

Next Story