மராட்டிய சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


மராட்டிய சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:45 PM GMT (Updated: 2 Oct 2019 7:22 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் காரட் தெற்கு தொகுதியிலும், தைராஜ் தேஷ்முக் லாத்தூர் ஊரகம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்ட சபைக்கு வரும் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக் கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதையடுத்து பிரதான கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வேகமாக வெளியிட்டு வருகிறது.

இதில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடந்த திங்கட்கிழமை 51 தொகுதிகள் அடங்கிய தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான், கட்சியின் மாநில தலைவர் பாலாசாகேப் தோரட் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவானின் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

அவருக்கு சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த உதயன்ராஜே போஸ்லேயின், சதாரா நாடாளுமன்ற தொகுதியில் நடக்கும் இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கட்சி முடிவு செய்திருந்ததாக தெரிகிறது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவான் அந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டார். சட்டசபை தேர்தலில் மட்டுமே தான் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தனது 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அவருக்கு காரட் தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகன் தைராஜ் தேஷ்முக்கிற்கு லாத்தூர் ஊரக தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரின் மூத்த சகோதரர் அமித் தேஷ்முக் லாத்துர் நகர் தொகுதியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக களம் காண்கிறார்.

இருவரும் வெற்றிபெறும் பட்சத்தில் மராட்டிய சட்டமன்றத்தில் முதல்முறையாக சகோதரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story