பவானிசாகர் அருகே பரிதாபம், தொழிலாளியை யானை மிதித்து கொன்றது - விறகு பொறுக்க சென்றவருக்கு நேர்ந்த கதி


பவானிசாகர் அருகே பரிதாபம், தொழிலாளியை யானை மிதித்து கொன்றது - விறகு பொறுக்க சென்றவருக்கு நேர்ந்த கதி
x
தினத்தந்தி 3 Oct 2019 3:45 AM IST (Updated: 3 Oct 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே விறகு பொறுக்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது.

பவானிசாகர், 

பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்டான் (வயது 55). கூலி தொழிலாளி. நேற்று பகல் 11.30 மணி அளவில் வெங்கட்டான் விறகு பொறுக்குவதற்காக கொத்தமங்கலம் காட்டுக்குள் சென்றார்.

அங்கு குனிந்து விறகு பொறுக்கிக்கொண்டு இருந்தார். அப்போது பின்னால் இருந்து ஒரு யானை வந்தது. ஆனால் வெங்கட்டானுக்கு தெரியவில்லை.

இந்தநிலையில் வெங்கட்டானை துதிக்கையால் தூக்கிய யானை கீழே தூக்கிப்போட்டு அவருடைய தலையிலும், வயிற்றிலும் காலால் மிதித்தது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். சிறிது நேரம் பிளிறியபடி அங்கேயே நின்ற யானை பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் ஆடு, மாடு மேய்க்க சென்ற தொழிலாளர்கள், வெங்கட்டான் பிணமாக கிடப்பதை பார்த்து உடனே பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

விறகு பொறுக்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது, அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story