காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்


காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2019 9:30 PM GMT (Updated: 3 Oct 2019 8:32 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி,

தென்காசியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி காந்தி சிலை முன்பு இருந்து தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பேரணியை நெல்லை உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகர் தொடங்கி வைத்தார். முத்துநாயகம் அறக்கட்டளை அறங்காவலர் பரமேஸ்வரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜயலட்சுமி, வட்டார வள மைய அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டார நூலகர் பிரமநாயகம் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராஜா நன்றி கூறினார்.

பேரணியில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சிலர் காந்தி வேடம் அணிந்திருந்தனர். பேரணி ரத வீதிகள், தெப்பக்குளம் வழியாக சென்று சி.எம்.எஸ் பள்ளியில் முடிவடைந்தது.

தென்காசியை அடுத்த மேலகரம் அருகே உள்ள மின் நகர் பகுதியில் தேசிய பசுமைப்படை மாணவ-மாணவிகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் 50 மரக்கன்றுகள் சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டன. மேலும் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மூத்த குடிமக்கள் சங்க தலைவர் தம்புராஜ், தென்பொதிகை நடைவருவோர் கழக தலைவர் ரெங்கநாதன், பேராசிரியை விஜயலட்சுமி, என்ஜினீயர் அறிவு எழில், தென்காசி வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, ஆறுமுகம், மின் நகர் நலவாழ்வு சங்கத்தலைவர் சபேசன், அறிவியல் கழக மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ராஜமாணிக்கம் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செங்கோட்டை நகராட்சி தூய்மை இயக்கம் சார்பில் அரசு அலுவலக வளாகம் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செங்கோட்டை நூலகத்தில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓவிய கண்காட்சி நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புளியங்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) சுரேஷ் உத்தரவின்படி நடந்த இந்நிகழ்ச்சியின் போது பனை விதைகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.

சங்கரன்கோவிலில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. காங்கிரஸ் பொன் விழா மைதானம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு பொன் விழா கமிட்டி தலைவர் சித்திரைக்கண்ணு தலைமை தாங்கி, காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியையொட்டி வீரவநல்லூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் பெத்ராஜ், சுகாதார ஆய்வாளர் பிரபாகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் முனியாண்டி, சுடலைமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மெயின் பஜார், பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, கிளாக்குளம், ரெயில்வே பீடர் ரோடு மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு கீழப்பாவூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமாரி லதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில், காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் உதவி தலைமை ஆசிரியர் ரவி, பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story